Saturday, March 30, 2013

சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லி செடி.

இன்சுலின் செடி.

1) மூலிகையின் பெயர் -: இன்சுலின் செடி.

2) தாவரப்பெயர் -: காஸ்டஸ் பிக்டஸ்

3) தமிழ் பெயர் -: கோஷ்டம் (Kostam)

சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லி


4) PLANT FAMILY: Costaceae

5) BOTANICAL NAME: Costus இக்நேஉஸ்

6) பயன் தரும் பாகம் -: இலை.

7) வளரியல்பு -:
இந்தச் செடி வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். இது பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் தற்போது இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரி யிலும் இந்த தாவரத்துக்கான நர்சரிகள் உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இதை இனப் பெருக்கம் செய்ய 3 கணுவுகளை உடைய முதிர்ந்த குச்சிகளை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து விடும். ஆரம்பத்தில் அடிக்கடி தண்ணீர் விட வேண்டும். இதன் இலைகள் மா இலை போன்று இருக்கும். ஆனால் இலைகள் அடுக்காக விசிறி போல் சுற்றிக் கொண்டு மேல் நோக்கி வளரும். சுவை சிறிது புளிப்பு கலந்திருக்கும்.

8) மருத்துவப் பயன்கள் -:

சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள். இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுக் கட்டுரை-Pharmacology Study
தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது.ANTI_Diabetic herb.


பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடைவார்கள்.

அணுகவும் :

சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லி செடிக்கு

ராஜபாளையம் வாசுகி நர்சரி கார்டன் உரிமையாளர் நடராஜன் : 92451 75721

Thursday, March 28, 2013

சர்க்கரை நோய்க்கு வெண்டைக்காய்


வெண்டைக்காயை நறுக்கி, இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

இலவசமாக மாடு கொடுக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?



காசுதான் கடவுள். பணத்தை செலவழிக்காமல் உங்களால் ஒரு சின்னப் பொருளைக்கூட வாங்க முடியாது என்கிற இந்தக் காலத்தில் இலவசமாக மாடு கொடுக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

தாம்பரம் சேலையூரில் உள்ள கோவர்தன் அறக்கட்டளை ஒரு நயா பைசாகூட வாங்காமல் நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கும் மாடுகளை இலவசமாகத் தருகிறது. தமிழ்நாடு முழுக்க பல ஏழை விவசாயிகள் இதனால் பயனடைந்திருக்கிறார்கள்.

``அட, ஆச்சரியமா இருக்கே!'' என்று கோவர்தன் அறக்கட்டளையின் தலைவர் நடேசனை சந்திக்கச் சென்றோம். மாட்டுத் தொழுவத்தில் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார் நடேசன். முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியரான இவர், பசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார். இத்தனை காலம் இவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்ததன் விளைவு, தமிழகம் முழுக்க ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பசு பாதுகாப்பு மையங்கள் (கோசாலைகளை) அமைக்கப்பட்டு அங்கே மாடுகள் அருமையாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பசுக்களைப் பாதுகாக்க கோவர்தன் அறக்கட்டளை செய்து வரும் பணிகளைப் பற்றி நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார் நடேசன்.

``பசுக்கள் நமக்கு சாதாரண விலங்குகள் அல்ல. நம்மைப் பெற்றெடுத்து, பாலூட்டி வளர்த்த அன்னைக்கு இணையாக பசுக்களை மதிப்பவர்கள் நாம். இறைவனுக்கு இணையாக பசுக்களை கும்பிடுபவர்கள் நாம். மனித குலத்துக்கு பசுக்கள் அளிக்கும் பயன் காரணமாகவே அதை தெய்வ நிலைக்குக் கொண்டு சென்றார்கள் நம்முடைய மூதாதையர்கள்.
பசு பால் தருகிறது. அது வெண்ணெய் ஆகிறது. தயிராகிறது என்கிறதோடு பசுவின் பயன் முடிந்துவிடுவதில்லை. அது கொடுக்கும் சாணத்தை வைத்துத்தான் நம்முடைய முன்னோர்கள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்திருக்கிறார்கள்.

இப்படி நாம் போற்றி வழிபட்டு வந்த பசுக்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபிறகு கிடுகிடுவெனக் குறைய ஆரம்பித்தது. ஒரு முறை ஒரு வெள்ளைக்காரர் மூதறிஞர் ராஜாஜியிடம் கேட்டாராம். `போயும் போயும் ஒரு மாட்டை வணங்குபவர்கள் நீங்கள். உங்களிடம் நாகரீக வளர்ச்சி இல்லை' என்று குற்றம் சாட்டினாராம். இதற்கு ராஜாஜி என்ன பதில் சொன்னார் தெரியுமா? `நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்ளும் நீங்கள் டிராக்டர்களை வணங்குகிறீர்கள். மகத்தான சத்து கொண்ட சாணத்தையும், கோமியத்தையும் (மாட்டின் சிறுநீர்) மாடு நமக்குத் தருகிறது. நீங்கள் கும்பிடும் டிராக்டர் சாணி போடுமா?' என்று கேட்டாராம் ராஜாஜி. அந்த வெள்ளைக்காரரால் பதில் சொல்ல முடியவில்லை.

இன்றைக்கு நாம் விவசாயத்தில் பின்தங்க ஆரம்பித்ததற்கு முக்கியமான காரணம், மாடுகளை நாம் காக்க மறந்ததுதான். மாடு என்கிற மிகப் பெரிய செல்வம் நம்மிடமிருந்து பறி போனதால், பைசா காசு செலவில்லாமல் நமக்குக் கிடைத்த எரு உரம் நமக்குக் கிடைக்காமலே போனது. வயல்களில் எரு உரங்களைப் போடுவதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்து செயற்கையான உரங்களை வாங்கி வயலில் போட்டோம். முதலில் அதிக விளைச்சலைக் கொடுத்த அந்த உரங்கள் இப்போது விளைச்சலின் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணமாக மாறிவிட்டது. இனி விவசாயத்தில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வரவேண்டும் என்றால், விவசாயப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்றால், நிலத்துக்கும் நமக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத ஒரு வேளாண்மையை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு இயற்கை விவசாயம்தான் ஒரே தீர்வு.
`இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் மாடுகள் வேண்டும். எங்களிடம் மாடு இல்லை. அதனால்தான் நாங்கள் இயற்கை விவசாயம் செய்வதில்லை' என்று வருத்தப்படுகிற விவசாயிகள் பலர். அப்படிப்பட்ட விவசாயிகளில் நல்லவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவசமாக மாடுகளைத் தந்து வருகிறோம்'' என்கிறார் நடேசன்.

மாட்டுக் கொட்டிலில் மா என்று மாடுகள் கத்த, ``கொஞ்சம் இருங்க! எங்க குழந்தைகளுக்கு இது டீ டைம். நீங்க காப்பி சாப்பிடுங்க. குழந்தைங்களுக்கு தண்ணி காட்டியிட்டு வந்துர்றேன்'' என்று ஓடினார். சில நிமிடங்களுக்குக் பிறகு வந்தவரிடம் ஒரு கேள்வி கேட்டோம்.

``ஒரு மாடு வாங்க வேண்டும் என்றால் ஐந்தாயிரம் ரூபாயாவது செலவாகும் என்கிறார்கள். உங்களால் மட்டும் மாடுகளை எப்படி இலவசமாகத் தர முடிகிறது?'' - நடேசனிடம் கேட்டோம்.

``கறவை நின்று போன மாடுகள், வயதான மாடுகள், நோய்வாய்ப்பட்ட மாடுகளால் பயன் இல்லை என்று நினைத்து, அவற்றைத் தொடர்ந்து பராமரிக்க யாரும் விரும்புவதில்லை. இப்படிப்பட்ட மாடுகளை கிடைத்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள். இந்த மாடுகள் பெரும்பாலும் கேரளாவுக்குத்தான் செல்கிறது. அங்கு அந்த மாடுகள் வெட்டப்பட்டு இறைச்சியாக விற்கப்படுகிறது. அரசின் முறையான அனுமதி எதுவும் இல்லாமல் இப்படிக் கடத்திச் செல்லப்படும் மாடுகளை பிராணி வதை தடுப்புச் சங்கத்தின் உதவியுடன் பிடித்து, அந்த மாடுகளை மீட்டு வருகிறோம். அந்த மாடுகளை எங்கள் பசு பாதுகாப்பு மையத்தில் வைத்து பராமரிக்கிறோம்.

பயனற்ற மாடுகளை விற்று, அறுப்புக்கு அனுப்பத் தயாரில்லாத கருணையுள்ளம் கொண்ட சிலர், அந்த மாடுகளைக் கோயில்களுக்குத் தானமாக கொடுத்து விடுகிறார்கள். தமிழகம் முழுக்க உள்ள நூற்றுக்கணக்கான கோயில்களில் ஆயிரக்கணக்கான மாடுகள் தானமாக வழங்கப்படுகிறது. இந்த மாடுகளை ஒரு சில ஆண்டுகள வரை வைத்துப் பராமரிக்கிறது கோயில் நிர்வாகம். பின்பு, ஏலமுறையின் மூலம் யாருக்கு வேண்டுமானாலும் விற்றுவிடுகிறது. இந்த மாடுகளை வெட்டி கறியாக்கி கேரளாவில் விற்க நினைக்கும் சிலர்தான் மீண்டும் மீண்டும் வேறுவேறு ரூபகங்களில் வந்து இந்த மாடுகளை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.
இதனை எதிர்ந்து நாங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு போட்டோ ம். கோயிலுக்கு நேர்ந்து விடப்படும் மாடுகள் ஏலம் மூலமாக யாருக்கும் விற்கக்கூடாது. அதற்கு எங்களிடம் கொடுத்தால் நாங்கள் அதை பராமரிக்கத் தயாராக இருக்கிறோம் என்று சொன்னோம். வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவே, கோயில்களிலிருந்து பல நூற்றுக்கணக்கான மாடுகள் இப்போது எங்களுக்குக் கிடைக்கின்றன. இவைகளைத்தான் ஏழை விவசாயிகளுக்கு இலவசமாகத் தருகிறோம். நாங்கள் தரும் மாடுகள் பால் கொடுக்காது. குட்டி போடாது. வண்டி இழுக்காது. ஆனால் விலை மதிப்பற்ற சாணத்தையும், கோமியத்தையும் உங்களுக்குக் கொடுக்கும்!'' - கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார் நடேசன்.

`யார் கேட்டாலும் மாடுகளைக் கொடுப்பீர்களா?' - இது நம்முடைய அடுத்த கேள்வி.

``நிச்சயமாகக் கொடுப்போம். ஆனால் நாங்கள் சொல்லும் நிபந்தனைகளை அவர்கள் நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும். மாடு வேண்டும் என்று எங்களிடம் கேட்டு வருகிறவர்கள் ஒரு ஏக்கரோ அல்லது இரண்டு ஏக்கரோ நிலம் வைத்திருக்க வேண்டும். மாடுகள் கொடுக்கும் சாணத்தையும், கோமியத்தையும் பயன்படுத்தி, இயற்கை விவசாயம் செய்பவராக இருக்க வேண்டும். செயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களுக்கு நாங்கள் மாடுகளைக் கொடுப்பதில்லை.

இந்த கண்டிஷன்கள் அடிப்படையானவை. இதை விட முக்கியமான இன்னொரு கண்டிஷன் இருக்கிறது. மாடு வேண்டும் என்று கேட்டு வந்தவுடன் யாருக்கு வேண்டுமானாலும் மாடுகளைக் கொடுத்துவிட மாட்டோம். மாடு வேண்டும் என்று கேட்கிறவர் யார், எப்படிப்பட்டவர், பசுக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அக்கறை அவருக்கு இருக்கிறதா அல்லது மாடுகளை இலவசமாக வாங்கி, கிடைத்த விலைக்கு விற்க வேண்டும் என்று நினைக்கிறாரா என்கிற மாதிரி பல கோணங்களில் அவர் பற்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் விசாரிப்போம். தீர விசாரித்த பிறகு அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால்தான் மாடுகளைக் கொடுப்போம். மாடுகளை நிச்சயம் பாதுகாப்பார் என்கிற நம்பிக்கை அவர் மீது எங்களுக்கு வந்துவிட்டால் ஒரு மாடு அல்ல, இரண்டு மாடு அல்ல, நூறு மாடுகளைக்கூட கொடுப்போம்.

மாடுகளைக் கொடுத்த பிறகு எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டுக்கு நாங்கள் வருவோம். நாங்கள் கொடுத்த மாட்டை நீங்கள் நன்றாக வைத்திருக்கிறீர்கள் என்கிற திருப்தி எங்களுக்கு ஏற்பட்டால்தான் மாடு உங்களிடம் தொடர்ந்து இருக்கும். மாட்டுக்கு சரியான தினி கொடுக்காமல் காயப் போட்டால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டோம்.
பொதுவாக ஒரு தனிப்பட்ட நபர் வந்து எங்களிடம் மாடு கேட்பதைவிட, மூன்று, நான்கு பேர் சேர்ந்து, கூட்டாக வந்து மாடுகளைக் கேட்டால், அவர்களுக்கு மாடு வழங்க முன்னுரிமை அளிப்போம். இப்படி மாடுகளைக் கொடுப்பதன் மூலம் அடிக்கடி வந்து மாடுகளைக் கண்காணிக்கவும் எங்களுக்கு வசதியாக இருக்கும்'' என்கிறார் நடேசன். கோவர்தன் அறக்கட்டளையிலிருந்து மாடுகளைப் பெற்றதன் மூலம் பலருடைய வாழ்க்கைப் பாதையே மாறி இருக்கிறது. இதற்கு ஒரே ஒரு உதாரணம், கூத்தம்பாக்கத்தில் உள்ள அன்னை இந்திரா மகளிர் சுயஉதவிக் குழு. இந்தக் குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு ஆளுக்கொரு மாட்டை கொடுத்திருக்கிறது இந்த அமைப்பு. அந்த மாடுகளை வைத்துக் கொண்டு அவர்கள் காய்கறி வளர்த்தார்கள். முன்பு வீட்டில் உள்ள வேலைகளை மட்டுமே செய்து வந்த அந்தப் பெண்கள் இன்று கை நிறைய சம்பாதிக்கிறார்கள். இப்படித் தமிழகம் முழுக்க நூற்றுக்கணக்கான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகிறார் நடேசன்.

கோவர்தன் அறக்கட்டளையைப் பொருத்த வரை முக்கியமான இன்னொரு விஷயம், இந்த அமைப்பு கொடுத்த மாடுகளை வைத்துக் கொண்டு, இயற்கையான முறையில் பயிர்களை விளைவித்தால் அதை விற்றுத் தரவும் உதவி செய்கிறது. ``தாம்பரத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தினமும் இயற்கையாக விளையும் அரிசி ஒரு மூட்டை வேண்டும் என்று கேட்டார்கள். எங்களால் கொடுக்க முடியவில்லை. நூறு லிட்டர் பால் வேண்டும் என்று கேட்டார்கள். எங்களால் கொடுக்க முடியவில்லை. இயற்கையாக விளைவிக்கப்படும் பொருட்களுக்கு நிறைய டிமாண்ட் இருக்கிறது. சப்ளைதான் இல்லை'' என்கிறார் நடேசன்.

நடேசனின் முகவரியும் தொலைபேசி எண்ணும்:

கோவர்த்தன் அறக்கட்டளை,
6, வடக்கு ஆஞ்சனேயர் கோவில் தெரு,
மாருதி நகர்,
ராஜகீழ்ப்பாக்கம்,
சோலையூர்,
சென்னை-600073.

044-22272618.

Tuesday, March 19, 2013

வெட்டிவேர்

வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்ததுவிலாவேர், இலமிச்சம் வேர் என்ற பெயர்களால் குறிப்பிடப்படும் இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல் வளரும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டிவேர் என வழங்கப்படுகிறது

வெட்டிவேர் 

சாகுபடி முறைகள்:
வெட்டிவேரின் செடிகளை வேருடன் வெட்டி, தோண்டி எடுத்து, ஒரு கொத்தாக உள்ள செடியைத் தனித்தனியே பிரித்தெடுக்க வேண்டும். பின் வேர்ப்பகுதியிலிருந்து 15-20 செ.மீ. மேலே உள்ள இலைகளை வெட்டிவிட வேண்டும். வேர்ப்பகுதியிலிருந்து 10 செ.மீ. கீழே உள்ள வேர்களை வெட்டி, நடுவதற்கு உள்ள நாற்றுக்களைத் தயாரிக்க வேண்டும். இதனை 15 செ.மீ. இடைவெளியில் நடுதல் அவசியமாகும்.கரும்பு நடுவதுபோல் நடவேண்டும்வேர் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது..

இதற்கு அதிக ஆள் தேவையில்லை. அதிக தண்ணீர் தேவையில்லை. அதிக வெயில் தேவையில்லை. அப்படியே அதிக தண்ணீர், அதிக வெயில் இருந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு இல்லை.
வெட்டிவேர் நாற்று 

 அறுவடை  காலம் 
12 மாதங்களில் இருந்து 14 மாதங்களுக்குள் அறுவடை செய்துகொள்ளலாம்.
ஒரு ஏக்கருக்கு 12,000 முதல் 15,000 வரை நாற்றுகள் தேவைப்படும். ஒரு நாற்று 60 பைசாவிற்கு வாங்கி பயிரிட வேண்டியதுதான். முதல்முறை மட்டும்தான் இந்த செலவு. அடுத்தமுறை நம் நிலத்தில் இருந்தே நாற்றுகள் எடுத்துக்கொள்ளலாம். மிகுதியாக உள்ளதை தேவையானவர்களுக்கு விற்றுவிடலாம்.

 கரும்பு நடுவதுபோல் நடவேண்டும். பார்ப்பதற்கு உலர்ந்தாற்போல் இருந்தாலும் நாற்று நட்ட பதினைந்திலிருந்து இருபத்தி ஐந்து நாட்களுக்குள் பச்சை பிடித்துவிடும். மூன்று மாதங்கள் கழித்து கால் மாற்றிவிட வேண்டும். ஆறு மாதங்கள் கழித்துகளை எடுக்க வேண்டும். அவ்வளவுதான். அதற்குப்பிறகு 13ம் மாதத்தில் அறுவடைதான்

வேர் பகுதி 



உரம் மேலாண்மை  
ரசாயன உரம் தேவையில்லை. பூச்சிமருந்து தேவையில்லை. வெட்டிவேர் செடியே பூச்சிகொல்லியாக செயல்படுகிறது. பெரிய காய்கறித்தோட்டம் வைத்திருப்பவர்கள் ஊடுபயிராகவோ வரப்புகளிலோ நெருக்கமாக நட்டுவிட்டால் அதுவே பூச்சிவிரட்டியாகவும் செயல்படும்.

பிற பயன்கள்
1.மேலும் பூச்சிகள், எலிகள், பாம்புகள் ஆகியவற்றை இதன் இலைகளும் வேர்களும் விரட்டிவிடுகின்றன. இதன் வேரில் உள்ள எண்ணெய்த்தன்மை எலிகளை அண்டவிடாது.நெல்வயல்களில் வெட்டிவேரை நடலாம். இதனால் வயலில் அமைக்கப் பட்ட கரைகள் உறுதிப்படும்.

2.ஏலத் தோட்டப் பகுதிகளில் வெட்டிவேரைப் பயன்படுத்தினால், நிலச்சரிவு ஏற்படாது. இடுகரை விழாது. வெட்டிவேர் நட்டதும், அந்தப்பூமி உறுதிப்பட்டுவிடும். கல்சுவர்களின் ஊடே இது செழிப்பாக வளர்ந்துசெல்லும்.
மண் அரிப்பை தடுக்க 

3. இது பயிரையோ, அதன் விளைச்சலையோ எவ்விதத்திலும் பாதிக் காது.

4.ஒவ்வொரு ஆண்டும் வெட்டிவேரைத் தரைமட்ட அளவிற்கு வெட்டிவிட்டு, உரிய பயிருக்கு வெட்டிவேர் கூடுதல் நிழல் தராமல் தடுக்கலாம்.

5.இதன் உறுதியான சிம்பு வேர்கள் பூமிக்குள் 3 மீட்டர் ஆழம் வரை அடர்ந்து படர்ந்து, மண் சரிவு, உடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

6.மற்ற விவசாயப் பயிர்களின் இயல்பான வளர்ச்சியில் இது போட்டியிடுவதில்லை. அவற்றின் வளர்ச்சியில் பெரிதும் துணைபுரிகின்றது.

7.இத்தகயை வெட்டிவேர் எல்லா வகையான மண்ணிலும் பல வகையான கால நிலையிலும் வளமுடன் வளரும். இதனைச் சுற்றியுள்ள மற்ற பயிர்கள் ஒரு வேளை அழிய நேர்ந்தாலும் வெட்டிவேர் அழிவதில்லை. அடுத்துவரும் மழையிலிருந்து மண்ணைக் காக்க, மண்ணிற்குள் மறைந்திருக்கும்.
 
 விற்பனை முறைகள் 
இது ஒரு லாபகரமானபயிர். வெட்டிவேர் புல்லானது நல்ல மருத்துவகுணம் உள்ளதால் இதற்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது. எத்தகைய மண்ணாக இருந்தாலும் பாதகமில்லை. ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு டன் வேர் நிச்சயம். மணல்பாங்கான நிலமாக இருந்தால் வேர் நன்கு இறங்கி விவசாயிகளுக்கு நல்ல மகசூலைத் தரும். இரண்டு டன்னுக்கு மேலும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். ஒரு டன் 50000 என்ற அளவில் விற்பனையாகிறது 

மேலும்  தொடர்புக்கு 
தொடர்புக்கு: எம்.அகமதுகபீர், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர் (அஞ்சல்), தாராபுரம்-638 657.
-
எம்.அகமது கபீர், வேளாண்மை ஆலோசகர், அக்ரி கிளினிக், 93607 48542. 

வெட்டிவேர் நாற்றுகள் விலைக்கு உள்ளன. வேண்டுவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
வீ.ராஜகோபாலன், ஸ்ரீதேவி மெடிக்கல்ஸ், திருவளப்பாடி, அத்தாணி, அறந்தாங்கி வட்டம், புதுக்கோட்டை-614 630. 04371-244 408.

வெட்டிவேர்: புல்-நாற்று, வளர்ப்பு முறை மற்றும் ஆலோசனைகளுக்கு:
சி.பாண்டியன், சி.எம்.விவசாயப்பண்ணை, குருவாடிப்பட்டி, சுண்டைக்காடு (அஞ்சல்), திருப்பத்தூர் தாலுகா, சிவகங்கை. 93629 49176.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடர்புக்கு வின்சென்ட்.9894066303.http://www.maravalam.blogspot.in


நன்றி :
1.தினமலர் 
2.திரு .வின்சென்ட்  அவர்கள்.
3.youtube